உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி கட்டடம் வெய்யலுாரில் இடிந்து விழும் அபாயம்

அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி கட்டடம் வெய்யலுாரில் இடிந்து விழும் அபாயம்

சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுாரில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி கட்டடம் பழுதடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பயின்று வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுாரில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.இப்பள்ளி கட்டடம் பழுதடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்பறையில் அமர அச்சப்படுகின்றனர். பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரக்கோரி ஊராட்சி தலைவர் ராஜமோகன் மற்றும் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.இதுகுறித்து, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மைதிலி மகேந்திரன் கூறுகையில், 'பள்ளிக் கட்டடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே பழுதடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழத்துவங்கியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் பாதுகாப்பு கருதி வெளியே வராண்டாவில் பாடம் நடத்துகின்றனர்.புதிய கட்டடம் கட்டித்தரக் கோரி உயரதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் காலம் தாழ்த்தி வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ