| ADDED : ஜன 09, 2024 07:33 AM
சிதம்பரம், : சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளம் நிரம்பினால், உபரி நீரை, வெளியேற்ற, கிபி 10 -13 நூற்றாண்டில், 1200 மீட்டர் துாரம், பூமிக்கடியில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய், பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்த தொழில்நுட்பத்தில் பாம்பு வடிவில் அமைத்துள்ளனர்.மன்னர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த சுரங்க நீர் வழிப்பாதை, பல ஆண்டாக பராமரிக்காததால், கடந்த 2020ம் பெய்த கன மழையால், சிவகங்கை குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறாமல், கோவிலின் பொற்கூரை உள்ள சபைக்கே திரும்பியது. இதனால் நடராஜர் கோவிலின் சபை பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. அதனை தொடர்ந்து, அடைப்பு ஏற்பட்டுள்ள, இடங்களை கண்டறிந்து, பூமிக்கடியில் உள்ள நிலவறை கால்வாயை சரி செய்தனர்.நேற்று முன்தினம் சிதம்பரத்தில் பெய்த கன மழை காரணமாக, நடராஜர் கோவிலின் சிவகங்கை குளம் நிரம்பியது. உபரி நீர், கோவிலில் துவங்கும், நிலவறை கால்வாய் வழியாக வெளியேறி தில்லையம்மன் ஓடைக்கு சென்றது. புதுத்தெருவில் அமைந்துள்ள நிலவறை கால்வாயின் மேல் பகுதியில், நீர் பச்சை நிறத்தில் வெளியேறியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.