விருத்தாசலம் நகரில் பஸ் நிலையம், ரயில் நிலையம், பாலக்கரை, ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், சிதம்பரம் பிரிவு சாலை, ஏனாதிமேடு, குப்பநத்தம் புறவழிச்சாலை என, 11 இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் 3 உள்ளன. இங்கிருந்து மதுபோதையில் வெளியேறும் வாகன ஓட்டிகளால் பிரதான சாலைகளில் விபத்துகள் நிகழ்கின்றன. மேலும் போதை தலைக்கேறிய ஆசாமிகளால் பொது மக்கள், பெண்கள், மாணவிகள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை, பள்ளி, வழிபாட்டுத் தலங்களுக்கு, 100 மீ., தொலைவிற்குள் உள்ள மதுபானக் கடைகள், தனியார் பார்களை அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதால் மூடப்பட்ட மதுபான கடைகள்; மாநில நெடுஞ்சாலையாக தரம் குறைக்கப்பட்டதால் மீண்டும் திறக்கப்பட்டன. தற்போது, விருத்தாசலம் - சேலம் பிரதான புறவழிச்சாலையில், கோ.பொன்னேரி ரவுண்டானாவில் இருந்து, 100 மீ., தொலைவில் உள்ள ஏனாதிமேடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. புறவழிச்சாலை என்பதால் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பாதை உள்ளது. மற்ற பகுதியில் சென்டர் மீடியன் அமைத்து, அதன் நடுவே அரளி செ டிகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏனாதிமேடு டாஸ்மாக் கடைக்கு சென்று வர ஏதுவாக சென்டர் மீடியனின் ஒரு பகுதியை மர்ம நபர்கள் உடைத்து, இருசக்கர வாகனங்கள் கடக்கும் வகையில் மாற்றியுள்ளனர். மது போதையில் இப்பகுதியை கடக்கும் போது, அவ்வழியே அதிவேகமாக செல்லும் வாகனங்களில் மோதி விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. மேலும், மதுப்பிரியர்களால் அப்பாவி மக்களும் விபத்தில் பாதிக்கும் அபாயம் உள்ளது. விருத்தாசலம் புறவழிச்சாலையில் மதுக்கடைக்கு செல்லும் வகையில் சென்டர் மீடியனில் உருவாக்கிய பாதையை மூடி, அதை உருவாக்கிய, சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.