| ADDED : ஜன 06, 2024 06:30 AM
கடலுார : 'கடலுார் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, சட்டசபை மதிப்பீட்டுக் குழு தலைவர் கூறினார். கும்பகோணம் எம்.எல்.ஏ, அன்பழகன் தலைமையிலான சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.பின்னர் குழு தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி, கடலுார் மாவட்டத்தில் 30 இடங்களில் ஆய்வு செய்தோம். கடலுார் மாவட்டம் அடிக்கடி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளது. வீராணம் ஏரியில் கொள்ளளவை உயர்த்தும் பணி, கடலுார் மற்றும் பண்ருட்டி வட்டாரத்தில் பெண்ணையாற்றில் வெள்ளத் தடுப்புப் பணி. கிள்ளை இருப்புப் பாதை அருகே வெள்ளாற்றின் குறுக்கே வெள்ளத் தடுப்புப் பணி என பல்வேறு வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்தந்த துறை அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான பட்டியல் கொடுக்கப்படும். இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் வரும் 9ம் தேதி நடக்கிறது. கூட்டத்தில், கடலுார் மாவட்டத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு, இனிவரும் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.