உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள்... அவதி; குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையின் அவலம்

ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள்... அவதி; குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையின் அவலம்

வடலுார் : குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இருந்தும் பார்மசிஸ்ட், அலுவலக உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி பட்டு வருகிறனர். குறிஞ்சிப்பாடி எம். எல். ஏ. அலுவலகம் அருகில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது .இங்கு குறிஞ்சிப்பாடி நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள விருப்பாச்சி, கல்குணம், மீனாட்சி பேட்டை ,கண்ணாடி, அரங்கமங்கலம், கன்னி தமிழ்நாடு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை,எளிய பொதுமக்கள் தினமும் 750 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவம், பச்சிளம் குழந்தைகள் பிரிவு, பொது மருத்துவம் ,சித்த மருத்துவம், உட்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர் எண்ணிக்கை போதுமான அளவில் இருந்தும் மதியத்திற்கு மேல் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் மதியத்திற்கு மேல் வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு இயங்கும் பார்மசியில் 4 பார்மசிஸ்ட் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 பேர் மட்டுமே பணியில் இருக்கிறனர். காலையில் கூட்டம் அதிகமாக வரும் போது நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து மருந்துகள் வாங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மருத்துவ உதவியாளர்கள் 5 பேர் இருக்க வேண்டும் ஆனால் தற்போது பணியில் 2 பேர்தான் உள்ளனர். இதனாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் துப்புரவு பணியாளர்கள் 5 பேர் இருக்க வேண்டும் 2 பேர்தான் பணியில் உள்ளனர். இதனால் வார்டில் துப்புரவு பணியை அந்தந்த பகுதியில் பணியில் இருப்பவரே செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. குறிஞ்சிப்பாடி நகரை சுற்றி கிராமப் பகுதிகள் அதிகம் இருப்பதால் புற நோயாளிகளாக மட்டுமே தினசரி 750 பேருக்கு மேல் வருகின்றனர். மேலும் சிகிச்சைக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மதியத்திற்கு மேல் பணியில் இருக்கும் டாக்டர்கள் பிரசவ வார்டில் பணியில் இருக்கிறார் எனக்கூறி நர்ஸ்சுகளே சிகிச்சை அளிக்கும் நிலையும் நடந்து வருகிறது. போதுமான வசதி இருந்தும் சரிவர சிகிச்சை அளிக்காமல் நோயாளிகளை கடலுார் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பும் நிலையும் இருந்து வருகிறது. மருத்துவமனையில் கழிவறைகள் சரிவர பராமரிக்கப்படாமல் அப்பகுதியே துர்நாற்றம் வீசி வருகிறது .சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இருந்து அதனை பூட்டி வைத்து ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வசதி இல்லாததால் கடும் கோடையில் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் மருத்துவமனையை ஆய்வு நடத்தி நோயாளிகளுக்கு போதுமான சிகிச்சைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி