| ADDED : நவ 20, 2025 05:51 AM
கடலுார்: கடலுார் வர்த்தக சங்கத்தினர், கொரோனா காலத்தில் கடைகளுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர். கடலுார் வர்த்தகர் சங்க மாநகர தலைவர் துரைராஜ் தலைமையில் வர்த்தகர்கள் மனு கொடுக்க கடலுார் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது கமிஷனர் முஜிபுர் ரஹ்மான், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மனுதாரர் மட்டுமே உள்ளே வர வேண்டும் என்றார். இதனால் வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கும், கமிஷனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் வர்த்தக சங்கத்தின் சார்பாகவே மனு அளிக்க வந்துள்ளோம் என தெரிவித்தனர். இதையடுத்து வர்த்தக சங்கத்தினர், 'கொரோனா காலத்தில், 2 ஆண்டுகள் கடைகளுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்,' என்ற கோர்ட் உத்தரவின்படி, ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர். அதற்கு கமிஷ்னர், 'மீண்டும் மனு அளியுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். அதனை ஏற்றுக் கொண்ட வர்த்தக சங்கத்தினர் மீண்டும் வரியை ரத்து செய்யக்கோரி மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். சங்க செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் பட்டேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் மற்றும் சரவணன், ரங்கநாதன், ரவிச்சந்திரன், பக்கீரான், ஞானசேகரன், வெங்கட், கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.