விருத்தாசலம், : மாவட்டத்தில் அரசு அலுவலக சுவர்கள் மற்றும் பொது இடங்களில் தடையை மீறி, சுவரொட்டிகள் ஒட்டுவது அதிகரித்துள்ளது.அரசியல் கட்சிகளில் துவங்கி, பிறந்தநாள், விழாக்கள், பதவியேற்பு, போராட்டங்கள் என, அனைத்திற்கும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது அதிகரித்துள்ளது. அப்படி வைக்கப்பட்ட ராட்சத பேனர்கள் சரிந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, பேனர் வைக்க தடை விதித்தும், கட்டுபாடுகளை விதித்தும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனுமதி பெற்று, போலீசார் பரிந்துரைக்கும் இடங்களில், விதிமுறைகளை பின்பற்றி பேனர்கள வைக்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் கடலுார் மாவட்டத்தில், விதிமுறை மீறி பேனர் வைப்பது அதிகரித்துள்ளது.மேலும், டிஜிட்டல் பேனர்களுக்கு மாற்றாக சுவரொட்டிகள் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. பெரிய அளவில் அச்சடிக்கப்படும் சுவரொட்டிகள் அரசு அலுவலக கட்டடங்கள், சுவர்கள், பாலங்கள், கல்வெர்ட்டுகள், சாலை சென்டர் மீடியனர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்படுகின்றன. பாலங்கள், கல்வெர்ட்டுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகள் நலன் கருதி போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு சிக்னல்கள் வரையப்பட்டிருக்கும்.இவற்றின் மீது அரசியல் கட்சியினர், தனியார் நிறுவன விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விளம்பரங்களை பார்த்தபடி செல்வதால், கவனக்குறைவாக எதிரே வரும் வாகனங்களில் மோதி, விபத்தில் சிக்குகின்றனர். அதுபோல், பாலத்தின் சுவர்களில் மோதி காயமடைகின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு சுவர்கள், பாலங்கள், கல்வெர்ட்டுகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் அகற்றி, சுவரொட்டி ஒட்டிய நபர்கள் மீது புகார் அளித்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. காலப்போக்கில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால், மாவட்டம் முழுவதும் அரசு அலுவலக சுவர்கள், பாலங்களில் சுவரொட்டிகள் பயன்பாடு அதிகரித்து விட்டது.எனவே, அரசு மதிற்சவர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்கவும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.