| ADDED : ஆக 13, 2024 05:46 AM
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்உள்ள விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக வெள்ளாறு விளங்கி வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்டியதால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்த ஆற்றில் மழை அதிக அளவில் பெய்தால் மட்டுமே தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது.மேலும், தொழுதுார் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே ஆற்றில் தண்ணீரை காண முடியும். ஆனால் இந்த வெள்ளாற்றில் காவிரியில் இருந்து திறந்து விடப்படும்நீரை கொண்டுவந்து சேர்த்தால் கடலூர் விருத்தாசலம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய மூன்று தாலுக்காவில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.மழைக்காலங்களில் ஆண்டுதோறும் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், உபரியாக உள்ள4 லட்சம் கன அடி வீணாக கடலில் திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீரை மடை மாற்றி திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி வழியே 65 கி.மீ. தொலைவிற்கு கால்வாய் அமைத்தால் தொழுதூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்க்க முடியும் என, விவசாயிகள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.தொழுதூர் அணைக்கட்டில் இருந்து 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வெலிங்டன் நீர்தேக்கத்திற்குதண்ணீரை திருப்பி தேக்கினால் நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன், அப்பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும்.மேலும் வெலிங்டன் ஏரியைச்சுற்றி வறண்டு கிடக்கும் சிறிய அளவிலான 26 ஏரிகளிலும் தண்ணீர் தேக்கிவைக்க முடியும். மேலும் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வெள்ளாற்றில் திறந்துவிடப்படும் நீர் பொலாந்துறை அணைக்கட்டு வழியாக பொலாந்துறை வாய்க்காலில் திருப்பி விடப்படும் நிலையில் இப்பகுதியில் உள்ள22 ஏரிகளிலும் நீரை தேக்கி வைக்க முடியும்.அத்துடன், பெலாந்துறையில் இருந்து பாளையங்கோட்டை பெரிய ஏரி வரை செல்லும்வாய்க்கால்களில் மூலம் தண்ணீரை கொண்டு செல்வதால், இப்பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என, விவசாயிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து புளியங்குடி செல்வராஜ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், மேட்டூரில் இருந்து வரும் காவிரி நீரை வெள்ளாற்றில் திருப்பி விட திட்டம் செயல்படுத்தினால், இப்பகுதியில் மூன்று தாலுகா பகுதி விவசாயிகள் பயன்பெறுவர். மேலும், வாழப்பாடி வழியாக தண்ணீர் வர கால்வாய் அமைத்தும், பம்பிங் செய்தும் வெள்ளாற்றில் கலக்க செய்யலாம். காமராசர் ஆட்சி காலத்தில் இதற்கான முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டு திட்டமிடப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக கிடப்பில் போட்டுவிட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வெள்ளாற்றில் நீர் வர துவங்கினால் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் காரணமாக, இப்பகுதியில் அதள பாதளத்திற்கு சென்ற நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும என, தெரிவிக்கின்றனர்.