| ADDED : ஜன 08, 2024 05:50 AM
கடலுார்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பொதுமக்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே சிங்கிரிகுடியில் பிரசித்திப்பெற்ற லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதயாத்திரையாக வந்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டிற்கான யாத்திரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஆன்மிக வழிபாட்டு மன்றம், பஜனை குழுக்கள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக நேற்று கோவிலுக்கு வந்தனர். விழாவையொட்டி, நேற்று காலை லட்சுமிநரசிம்மர், கனகவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட துாரத்திற்கு வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் வெளிப்புறத்தில் இரும்பு, மர தடுப்புகள் அமைத்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.