விருத்தாசலம்: விருத்தாசலம் கஸ்பா ஏரியில் இருந்து மழைநீர் வழிந்தோடி வீணாவதால், கோடை காலத்தில் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருத்தாசலத்தில், சேலம் புறவழிச்சாலையில் 278 ஏக்கரில், கஸ்பா ஏரி பரந்து விரிந்துள்ளது. மேமாத்துார் அணைக்கட்டு பாசன வாய்க்கால் வழியாக நீர்ப்பிடிப்பு கிடைப்பதால், ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழையின்போது எளிதில் நிரம்பி விடும். இதன் மூலம் விருத்தாசலம் நகரை ஒட்டிய மற்றும் ஆலிச்சிகுடி, இளமங்கலம், சாத்துக்கூடல் கீழ்பாதி உள்ளிட்ட கிராமங்கள் உட்பட 1,500 ஏக்கர் பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்த 2011ம் ஆண்டில், ஏரியின் நடுவே, விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை போடப்பட்டது. இதனால் சாலையின் இருபுற கரைகள், ஏரியை சுற்றிய பகுதிகளை தனிநபர் ஆக்கிரமிக்க துவங்கினர். மேலும் வீடுகள், காலியிடங்களில் குப்பைகளை கொட்டி பயன்படுத்த முடியாத நிலைக்கு மாற்றப்பட்டு விட்டது. அதுபோல், கட்டட கழிவுகள், இறைச்சி கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால், புறவழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஏரியை கடந்து செல்லும்போது முகம் சுழிக்கும் அவலம் உள்ளது. தற்போது, ஏரியின் பரப்பளவு சுருங்கி, புறவழிச்சாலையின் இருபுறம் குளம்போல மாறிவிட்டது. இதில் கோரை புற்கள், ஆகாய தாமரை, காட்டாமணி செடிகள் அதிகளவு மண்டி, துார்ந்தது. இதனால் ஏரியின் ஆழம் குறைந்து நீர்ப்பிடிப்பு பரப்பளவும் சரிந்தது. இதனால் விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டிட்வா புயல் எதிரொலியால் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி உடனுக்குடன் நிரம்பி, மதகு வழியாக வெளியேறி, வாய்க்கால் வழியாக மணிமுக்தாற்றில் கலந்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், கரைகள் வழியாக வழிந்தோடும் தண்ணீர், சுற்றியுள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை மூழ்கடிக்கும் அபாயம் உள்ளது. இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மழையின்போது அறுவடைக்கு தயாரான விளைநிலங்களில் ஏரி தண்ணீர் தேங்கி, விவசாயிகள் கடுமையாக பாதித்தனர். கண் துடைப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கஸ்பா ஏரியில் வண்டல் மண் அள்ளும் பணி நடந்தது. இதனால் ஏரி முழுவதும் துார்வாரப்பட்டு, நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிராக்டர்கள் சென்று வர ஏதுவாக கரைகளில் மட்டுமே அதிகளவு மண் எடுக்கப்பட்டது. இதனால் ஏரியின் கரைகள் பள்ளம் படுகுழிகளாக மாறின. ஆனால், ஏரி துார்வாரப்படாததால் முட்புதர்கள் அகற்றப்படவில்லை. இதனை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பயிர்கள் கருகும் அபாயம் ஏரியில் முழு கொள்ளளவு நீர்ப்பிடிப்பு செய்ய முடியாமல் மழைநீர் வெளியேறுவதால், கோடை காலத்தில் விவசாயப் பணிக்கு தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து, கருகும் நிலை உருவாகும். ஆண்டுதோறும் ஒரு பகுதி முழுவதும் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. எனவே, மழை ஓய்ந்ததும் முதற்கட்டமாக ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆகாய தாமரை உள்ளிட்ட முட்செடிகளை அப்புறப்படுத்தி, முழு கொள்ளளவு நீர்ப்பிடிப்பு வசதி செய்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.