| ADDED : ஜன 11, 2024 11:50 PM
கடலுார்: ரேஷன் அரிசி கடத்தியவரை தடுப்பு காவலில் போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வைத்தியநாதபுரம் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலுார் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கடந்த நவ., 4ம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தி, சரக்கு வாகனத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய தொழுதுார் காளிமுத்து, உறங்கூர் வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய வைத்தியநாத புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், 42; என்பவரை தேடி வந்தனர். இவரை, கடந்த 30ம் தேதி கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். ரவிச்சந்திரன் மீது, கடலுார் குடிமை பொருள் வழங்கல் துறையில் 4 வழக்குகள் உள்ளன. இவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு தடுப்பு காவலில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவுபடி, மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனிடம் தடுப்பு காவலில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.