உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆசிரியர்களே ஹீரோ

மாணவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆசிரியர்களே ஹீரோ

கடலுார் : 'மாணவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்போது தான் ஆசிரியர்கள் 'ஹீரோ'வாக மாறுகின்றனர்' என, கல்வியாளர் புகழேந்தி பேசினார்.கடலுாரில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த பள்ளி ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில் அவர் பேசியது:ஆசிரியர்கள் பணிக்கு சென்ற முதல் நாள் மற்றும் முதல் வகுப்பு பதற்றமாக இருந்திருக்கும். அப்போது, மாணவர்கள் வணக்கம் வைக்கும் போது, ஏற்படும் மகிழ்ச்சி ஆசிரியர்களால் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும். குடும்பத்தையும், வேலையையும் சமமாக பார்த்தால், மன அழுத்தம் இருக்காது என்கிறார்கள். ஆனால், அது நடக்காது. மன அழுத்தத்திற்கு காரணம் நாம் தெரியாமல் போட்டுள்ள முகமூடி தான். சமூக வெற்றி என்பது இந்த தலைமுறைக்கு உள்ள பிரச்னை. தனி மனித வெற்றி கொண்டாடப்படுவதில்லை. இது தான் மன அழுத்தம்.குறிக்கோளை கனவாகவும், கனவை குறிக்கோளாகவும் வைத்திருப்பதுதான் பிரச்னை. நான் என்னை எப்படி பார்க்கிறேன் என்பது தான் மன அழுத்தத்திற்கு காரணம். அந்த காலத்தில் மன அழுத்தம் இல்லை. ஆனால், இந்த காலத்தில் எல்.கே.ஜி., படிக்கும் குழந்தைக்கே மன அழுத்தம் உள்ளதாக கூறுகின்றனர்.டாக்டர்கள், பொறியாளர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். ஆனால், டாக்டர்கள், பொறியாளர்களுக்கு கிடைக்கும் மரியாதை ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை என்று நினைக்கிறோம். ஒரு ஆசிரியர் செல்லும்போது அவரிடம் படித்த மாணவர், இவர் தான் என் ஆசிரியர் என்று கூறுவதே மிகப்பெரிய மரியாதை தான்.இந்த தலைமுறை இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அவர்களை வழி நடத்த ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். இன்று ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் உருவமாக மட்டுமே உள்ளனர். அங்கு உணர்வுகள் இல்லை. குடும்பங்களில் கலந்துரையாடல் குறைந்துவிட்டது. சுய பரிசோதனை தான் மிக முக்கியமான ஒன்று. ஆசிரியர்களை, மாணவர்கள் ரசிக்க வேண்டும். ஆசிரியர்களை கண்டு மாணவர்கள் ஆச்சரியப்படும்போது தான் உங்களை ஆசிரியராக ஏற்றுக்கொள்கின்றனர். மாணவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும்போது தான் ஆசிரியர்கள் 'ஹீரோ'வாக மாறுகின்றனர். யாராவது ஒருவர் நம்மை சந்தோஷப்படுத்துவார் என நினைப்பது தவறு. அது நடக்காது. ஆசிரியர்கள் ஏணி மாதிரி என்பதைவிட, 'லிப்ட்'டாக மாறுவோம்.ரசிக்கப்பட்டு, ஆச்சரியப்படும்படி உள்ள ஆசிரியர்களை மட்டுமே குருவாக பார்ப்பார்கள். ஆசிரியர்கள் குருவாக மாறுதல் முக்கியமில்லை. குருவாக இருக்க வேண்டும். நல்லவர்களாக இருக்க முயற்சி செய்யாதீர்கள். வல்லவர்களாக இருக்க முயற்சியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை