| ADDED : மார் 19, 2024 05:03 AM
சிறுபாக்கம்: கடலுார் மாவட்டத்தில், ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 2.31 லட்சம் பணத்தை, தேர்தல் துறையினர் பறிமுதல் செய்தனர்.திட்டக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, சிறுபாக்கம் அடுத்த அடரி கிராமத்தில் தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர், நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.பகல் 1:00 மணியளவில் சேலம் நோக்கிச் சென்ற டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம், வஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த அபிமன்யு என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ.55 ஆயிரம் எடுத்து சென்றதும் தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் கண்காணிப்பு குழுவினர், திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வடலுார்
தாசில்தார் அமர்நாத் தலைமையிலான குறிஞ்சிப்பாடி நிலையான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கே.என்.பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வேகமாக வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் கடலூர் கூத்தபாக்கத்தை சேர்ந்த தனுஷ்கோடி என்பதும் உரிய ஆவணங்கள் இன்றி அவர் எடுத்து வந்த ரூ. 51 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து, குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலெட்சுமியிடம் ஒப்படைத்தனர்.அதேபோன்று, சேத்தியாத்தோப்பு சாலையில் தாசில்தார் கலாவசதி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, மினிடெம்போவில் வடலுார் ராஜலிங்கம் என்பவர் எடுத்து வந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் ரூ. 2.31 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.