ஆசியாவில் மிக பழமையான துறைமுகங்களில் கடலுார் முதுநகர் துறைமுகமும் ஒன்று. பரவனாறு, உப்பனாறு ஆகியன கடலில் கலக்கும் இடத்தில், 142 ஏக்கர் பரப்பளவில் துறைமுகம் அமைந்துள்ளது. கரையிலிருந்து ஒரு மைல் துாரத்திலேயே 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்ட இத்துறைமுகத்தில், 1940ம் ஆண்டு முதல் சிங்கப்பூர், மலேஷியா மற்றும் அரபு நாடுகளுக்கு மிளகு, மஞ்சள், இரும்பு தாதுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அரபு நாடுகள், சீனா, தாய்லாந்தில் இருந்து யூரியா, கோதுமை, அரிசி, சர்க்கரை, நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. சேலம் உருக்கு ஆலை இரும்பு தாதுக்கள், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.கடலுார் துறைமுகத்தின் முகத்துவாரப் பகுதி ஆழம் துார்ந்ததால், 2002ம் ஆண்டிற்கு பிறகு கப்பல் வருவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்கும் வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் சாகர்மாலா திட்டத்தில் கடலுார் துறைமுக விரிவாக்கப் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதற்காக, 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதன் மூலம் பரவனாற்றில் 1,500 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம், 10 மீட்டர் ஆழப்படுத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. அதேபோல், துறைமுகத்தில் கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றவும், இறக்குமதி செய்யும் வகையில், தலா 120 மீட்டர் நீளத்திற்கு இரண்டு கப்பல் அணையும் தளம் (வார்ப்) அமைக்கப்பட்டது.பணி முடிந்தும், துறைமுகம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல், கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனால், நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல், கப்பல் அணையும் தளத்திற்கு அருகில் உள்ள மண் மேடுகள் கரைந்து சீர்கேடு அடைந்து வருகிறது. எனவே அதிகாரிகள் துறைமுகத்தை பயன்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.