நெய்வேலி: லோக்சபா தேர்தல் பணிகளால், என்.எல்.சி., பங்கு விற்பனை விவகாரத்தை அரசியல் கட்சிகள் மறந்து விட்டன.கடலுார் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.,யில் 3,200 அதிகாரிகள் உள்ளிட்ட 10 ஆயிரத்து 500 நிரந்தர ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேரும் பணியாற்றுகின்றனர்.22 ஆயிரத்து 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், பல்லாயிரக்கணக்கானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் அளிக்கும் என்.எல்.சி., நிறுவனம், கடலுார் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக திகழுகிறது.கடந்த காலத்தில், என்.எல்.சி.,யின் பங்குகளை விற்க போவதாக தகவல் வெளியானதும், அரசியல் கட்சிகள் பொங்கி எழுந்து போராட்டங்களை நடத்தின. பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நெய்வேலிக்கு வரிசை கட்டி வந்து போராட்டங்களில் பங்கேற்றனர்.அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, என்.எல்.சி.,யின் பங்குகளை தமிழக அரசே வாங்குவதற்கு ஏற்பாடு செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், மேலும் 7 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கடும் கண்டனங்களை தெரிவித்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தற்போது அடக்கி வாசிக்கின்றனர்.லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட சூழ்நிலையில், தேர்தல் பணிகளில் பிசியாக உள்ளதால், என்.எல்.சி., விவகாரத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக, என்.எல்.சி.,யை பூட்டுவோம் என்ற பா.ம.க.,வினர்கூட பெயரளவுக்குத்தான் எதிர்ப்பை காட்டுகின்றனர்.'என்.எல்.சி.,யை காப்பாற்ற யாருமே இல்லையா' என, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும், ஊழியர்களும் புலம்புகின்றனர்.