கடலுார் : கடலுார் மாவட்டத்தில் காய்கறிகள் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த காலகட்டத்தில் வெயில் அதிகபட்சமாக இருப்பதால் காய்கறி செடிகள் பூ வைத்து காய்ப்பு தன்மை குறைந்துவிடும். சாதாரண நாட்களில் காய்க்க கூடிய விளைச்சலில் 50 சதவீதத்திற்கும் கீழ்தான் பலன் கிடைக்கும்.அக்னி வெயில் முடிந்து மழை பெய்தால்தான் மீண்டும் துளிர் விட்டு காய்க்க துவங்கும். ஆனால், அக்னி வெயில் முடிந்தும் வெயில் வாட்டி வதைப்பதால், காய்கறி விளைச்சல் குறைந்து, கடலுார் மாவட்டத்திற்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சமையலுக்கு தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பான்மை சமையல்களில் தக்காளி இன்றியமையாத பொருளாக உள்ளது. தக்காளி எப்போதுமே கிலோ ரூ. 10, 12 என விற்பனை செய்யப்பட்டு வந்தது, தற்போது கிலோ 40 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.தர்மபுரி மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைவால் இந்த விலை உயர்வு என வியாபாரிகள் கூறுகின்றனர்.அதேபோல், உள்ளூரில் விளையக்கூடிய கத்தரிக்காய் கடந்த வாரம் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. சுரைக்காய் கிலோ 20ல் இருந்து 45 ரூபாயாகவும், 40 ரூபாயாக இருந்த பீன்ஸ் 140 ஆகவும், உருளை 28 ல் இருந்து 38, சின்ன வெங்காயம் கிலோ 35 ல் இருந்து, 58, பல்லாரி 20 ல் இருந்து 25, சவ்சவ் 22 ல் இருந்து 50, முள்ளங்கி 22 ல் இருந்து, 30 ரூபாயாக அதிகரித்துள்ளது. அவரை 60 ரூபாய், இஞ்சி கிலோ 155, பச்சை மிளகாய் 75 ரூபாயாக உயர்ந்துள்ளது.இது ஒருபுறமிருக்க, காய்கறி விலைக்கு போட்டியாக மளிகைப்பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெள்ளை உளுந்து கிலோ 140 ரூபாய்க்கும், கறுப்பு உளுந்து 120, துவரம் பருப்பு 165ல் 180க்கும், கடலைப்பருப்பு 80 ல் இருந்து 90, பொட்டுக்கடலை 100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. காய்கறி மற்றும் மளிகைப்பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் குடும்பம் நடத்துவது பெரும் சவாலாக உள்ளது. இல்லத்தரசிகள் பொருட்களை வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.