| ADDED : பிப் 21, 2024 11:18 PM
கடலுார் : கடலுாரில் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் முதுநகர் சோனகர் வீதியைச் சேர்ந்தவர் யாசர் அராபத், 28; இவர், அதே பகுதியை சேர்ந்தவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். அதனை திருப்பி தராததால், கடன் தந்தவர் முதுநகர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் யாசர் அராபத்தை அழைத்து விசாரித்தனர். அப்போது, பணத்தை விரைவில் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால், குறிப்பிட்ட தொகை மட்டுமே கொடுத்துவிட்டு, மீதி தொகை கொடுக்காமல் மீண்டும் காலம் கடத்தினார்.அதனால் கடன் கொடுத்தவர் மீண்டும் நேற்று முன்தினம் முதுநகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார், யாசர் அராபத்தை விசாரணைக்கு அழைத்தனர்.விசாரணைக்கு பயந்து யாசர் அராபத் நேற்று காலை விஷம் குடித்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர நடந்து சென்றபோது, நியூசினிமா தியேட்டர் அருகில் மயங்கி விழுந்தார்.அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.