| ADDED : நவ 27, 2025 04:42 AM
பண்ருட்டி: பண்ருட்டி பஸ் நிலையத்தில் நகராட்சி அதிகாரியிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி பஸ் நிலையத்தில் கடந்த 2024ல், ரூ. 4 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் விழுப்புரம், சென்னை-கும்பகோணம் மார்க்கம், கடலுார் பஸ் நிறுத்தம் பகுதியில் புதிய கடைகள் கட்ட ஒப்பந்த பணி விடப்பட்டது. ஒப்பந்த பணி மந்தமாக நடந்து வரும் நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையில் பஸ்நிலைய பகுதி குண்டும், குழியுமாக மாறியது. இதனையடுத்து உடனடியாக பஸ் நிலைய பணிகளை சீரமைக்க, தற்காலிக பஸ்நிலையம் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் மாற்றப்படுவதாகவும். இதற்கான தற்காலிக பஸ்நிலைய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12:00 மணிக்கு நகராட்சி பொறியாளர் சுரேஷ், நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பஸ்நிலைய பகுதியில் முழு அளவில் பணிகள் நடைபெற வேண்டியுள்ளதால் 3 மாதங்கள், பஸ்நிலைய கடைகளை காலி செய்திட வேண்டும் எனவும், பராமரிப்பு பணிகள் முடிந்த பின், அனுமதிக்கப்படும் என்றும், தெரிவித்தனர். இதற்கு பஸ்நிலைய வியாபாரிகள் தரப்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நகராட்சிஅலுவலர்கள் வந்த வேகத்தில் திரும்பி சென்றனர். பின் நகராட்சி சேர்மன் ராஜேந்திரனை சந்தித்து வியாபாரிகள் புகார் செய்தனர். அதற்கு சேர்மன் ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்து கூறுகிறேன் என்றார்.