வாலிபரை கத்தியால் குத்திய கஞ்சா ஆசாமிகள் 2 பேர் கைது
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த தில்லை நாயகபுரத்தை சேர்ந்த சேகர் மகன் அறிவழகன், 29; நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் ஒருவருடன், ஞான விநாயகர் கோவில் தெருவில் உள்ள கடைக்கு சென்றார். அங்கு கஞ்சா போதையில் வந்த உடையார்குடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் சஞ்சய், 23; செந்தில் வேல் மகன் சக்திவேல்; தீதம்பாளையம் நடராஜன் மகன் மணிகண்டன், 29; ஆகிய மூவரும் முன்விரோதம் காரணமாக அறிவழகனிடம் தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் உள்ளிட்ட மூவரும் அறிவழகனை தாக்கினர். பின்னர் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து அறிவழகன் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதில் அறிவழகன் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயம் அடைந்த அறிவழகனை சிகிச்சைக்கு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் பதுங்கி இருந்த சஞ்சய், 23; மணிகண்டன், 29; இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.