நெய்வேலி; என்.எல்.சி.,யில் உருவாகும் புதிய பணியிடங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், நெய்வேலி வீரவன்னிய ராஜா கோரிக்கை வைத்தார்.இதுகுறித்து அண்ணாமலையிடம் அவர் வழங்கிய மனு:என்.எல்.சி., சுரங்கங்களில் இருந்து நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதால் கடலுார் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். கோவை அன்னுார் விவசாய மக்களுக்கு போராடியது போல் பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு போராட முன்வர வேண்டும்.என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திரா நகர் பகுதியில் மாற்று இடம், இம்மனைகளுக்கு உடனடியாக தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகள் மூலம் தொழில் தொடங்க கடன் வழங்க வேண்டும்.என்.எல்.சி., யில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு நிரந்தர வேலை, பணியின்போது இறந்த தொழிலாளர் வாரிசுகளுக்கு வேலை மற்றும் என்.எல்.சி.,யில் உருவாகும் புதிய பணியிடங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு 5 ஐந்து சென்ட் வீட்டு மனை வழங்க வேண்டும், வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு எஸ்.எம்.இ., ஆப்ரேட்டர் பயிற்சிக்கு 500 பேர்களுக்கு மாறாக, ஆயிரம் நபர்களுக்கு பயிற்சியளித்து நிரந்தர வேலை மற்றும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு படிப்புக்கு ஏற்றார் போல் நிரந்தர வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.