உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விருத்தாசலத்தில் செல்வாக்கை மீட்குமா பா.ம.க.,? தந்தை - மகன் மோதலால் கட்சியினர் பரிதவிப்பு

 விருத்தாசலத்தில் செல்வாக்கை மீட்குமா பா.ம.க.,? தந்தை - மகன் மோதலால் கட்சியினர் பரிதவிப்பு

க டந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., வாழ்வா சாவா போராட்டத்துடன் களமிறங்கியது. அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளும்; அ.ம.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கியது. அதில், விருத்தாசலம் சட்ட சபை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில், காங்; அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க; அ.ம.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க; வேட்பாளர்கள் களமிறங்கினர். பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த தேர்தலில் பா.ம.க., வேட்பாளரை, 800 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளர் தோற்கடித்தார். அ.தி.மு.க.,வுடன் பலமான கூட்டணியில் களமிறங்கியபோதும், பா.ம.க., வேட்பாளர் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு முதல் வெற்றியை தந்த விருத்தாசலம் தொகுதியில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் 'டிபாசிட்' இழந்தார். கடந்த சட்டசபை, 2006 தேர்தலில், விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றபோது, பா.ம.க., கோட்டையில் ஓட்டை விழுந்து விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கேற்ப, கடந்த தேர்தலிலும் சொற்ப ஓட்டுகளில் பா.ம.க., வெற்றி வாய்ப்பை இழந்தது விமர்சனத்தை எழுப்பியது. இதனால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மேலும், வட மாவட்டங்களில் பா.ம.க., செல்வாக்குடன் இருப்பதை உறுதிப்படுத்தவும் காத்திருக்கின்றனர். ஆனால், தந்தை மகன் மோதலால் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் இடையே மோதல் போக்கு நீட்டிப்பதால், தேர்தல் களம் எவ்வாறு இருக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. இவற்றை கடந்து பா.ம.க., சீட் பெற்று, தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி