கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட 31,202 பெண்கள் கூடுதலாகஓட்டளித்தனர்.கடலுார் லோக்சபா தொகுதியில் காங்., விஷ்ணுபிரசாத், தே.மு.தி.க., சிவக்கொழுந்து, பா.ம.க., தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி மணிவாசகன் மற்றும் சுயேட்சைகள் என 19 பேர் போட்டியிட்டனர்.கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி என,6 சட்டசபை தொகுதிகளில் 1,509 ஓட்டுச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.தேர்தல் முடிந்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் சட்டசபை தொகுதிகள் வாரியாக வைக்கப்பட்டுள்ளது.இத்தொகுதியில் 6,93,353 ஆண் வாக்காளர்கள், 7,19,178 பெண் வாக்காளர்கள், 215 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,12,846 பேர் உள்ளனர்.100 சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தின.ஆனாலும், 4,97,000 ஆண் வாக்காளர்கள், 5,28,202 பெண் வாக்காளர்கள், 96 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10,25,298 பேர் மட்டுமே ஓட்டளித்தனர்.ஓட்டுப் பதிவு சதவீதம் 72.57 ஆகும். 3,87,448 பேர் ஓட்டளிக்கவில்லை.கடலுார் லோக்சபா தொகுதியை பொறுத்தவரையில் ஆண்களை விட கூடுதலாக 31,202 பெண்கள் ஓட்டளித்துள்ளனர்.