| ADDED : ஜூலை 11, 2011 02:48 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் உழவர் பயிற்சி நிலையம் மூலம் உழவர் விவாதக்குழு அமைப்பாளர்களுக்கு, புதிய தொழில்நுட்ப பயிற்சி முகாம், தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.முகாமில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் மேகநாதன் தலைமை வகித்து பேசியதாவது:உழவர் விவாதக்குழு அமைப்பாளர்கள் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் சிறப்பு திட்டங்களை தெரிந்து கொண்டு, குழுவில் உள்ள விவசாயிகளுக்கும் எடுத்துரைத்து உற்பத்தியை இரு மடங்காக்கி கூடுதல் லாபம் பெற வேண்டும். தற்போது, மானாவாரியில் வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிர், 45வது நாளை நெருங்கிவிட்டதால், இப்பருவத்தில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை இட்டு, கொத்தி மண் அணைத்தால், நல்ல திரட்சியான அதிக எண்ணை சத்துடன் கூடிய நிலக்கடலை காய்களை பெற்று லாபமடையலாம்.மாவட்டத்தில் மானாவாரியில் முக்கிய பயிராக சாமை சாகுபடி செய்யப்படுகிறது. சாமையில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு விதைப்பிக்கு முன் சாமை விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில், 100 மில்லி இளநீர் அதாவது 10 சதவிகிதம் இளநீர் கரைசலில் ஆறு மணி நேரம் ஊறவைத்து பின் விதைப்பு செய்ய வேண்டும். இளநீரில் பொட்டாஷ் சத்து அதிகமாக இருப்பதால், இது வறட்சியை தாங்கி வளர்ந்து நல்ல மகசூலை தரும்.இவ்வாறு அவர் பேசினார்.பழப்பயிர்கள், காய்கறிகள், பூக்கள், நறுமணப்பொருட்கள் மற்றும் தென்னை சாகுபடி புதிய தொழில் நுட்பங்கள் பற்றியும் நுண்ணிய நீர் பாசன முறையான சொட்டு நீர் பாசனம் அமைத்து உரம் மற்றும் தண்ணீரை தேவையான அளவு தேவையான நேரத்தில் அளித்து மகசூலை அதிகரித்து பயன்பெறுமாறு தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார்.வேளாண் பயிர் சாகுபடியில் உள்ள புதிய ரகங்கள் மற்றும் அதன் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவி பேராசிரியர் சரவணன் பேசினார். கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கவனிக்க வேண்டியவை பற்றி அரசு நலத்திட்டங்கள் மற்றும் தீவனப்புல் வளர்ப்பு பற்றி கால்நடைத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் விளக்கினார்.வேளாண்மை பொறியியல் உதவி பொறியாளர் மணி, உதவி பட்டு ஆய்வாளர் கிருஷ்ணன், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சுதர்சன் ஆகியோர், தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.இப்பயிற்சியில், 46 உழவர் விவாதக் குழு அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி ஏற்பாட்டை, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் அமுதவள்ளி செய்தார்.