| ADDED : ஜூலை 01, 2024 04:05 AM
தர்மபுரி: தர்மபுரி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காக, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை முன் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் இங்கு அமர்ந்து பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.இந்த நிழற்கூடத்தின் முன், பொதுமக்கள் நடப்பதற்காக சிமென்ட் கற்கள் கொண்டு, நகராட்சி நிர்வாகம் சார்பில் தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை ஆக்கிரமித்து, தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நடந்து செல்ல முடியாமலும், பஸ் மற்றும் ஆட்டோக்கள் உள்ளே வர முடியாமலும் தவிக்கின்றனர். எனவே, பயணிகளின் நலன்கருதி நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.