| ADDED : மே 30, 2024 01:24 AM
பாப்பாரப்பட்டி, தர்மபுரி, பாப்பாரப்பட்டி அடுத்த கிட்டம்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து கங்கணம் கட்டுதல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலையில், மாரியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏராளமான பெண் பக்தர்கள் மாவிளக்கு மற்றும் கரகம் எடுத்து, பாப்பாரப்பட்டி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்து, வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர். பின், பக்தர்கள் கொண்டு வந்த பால் குடங்களில் இருந்த பாலை ஊற்றி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.