| ADDED : ஜூன் 15, 2024 07:44 AM
தர்மபுரி : திருநங்கைகளின் எண்ணிக்கை பதிவுக்கு, சிறப்பு முகாம் நடக்க உள்ளது என, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு, நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு அடையாள அட்டை, ரேஷன்கார்டு, சுய தொழில் துவங்க மானியத்தொகை, கல்வி உதவித்தொகை, சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத்தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் திருநங்கைகள் தொடர்பான சமகால தரவுகளை பெற்றிட, மாநில அரசு ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.இந்த எண்ணிக்கையின் அடிப்படையில், அவர்களுக்கு கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் போதிய இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும், 21 காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், நலவாரியத்தில் உள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள, மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும், 04342-233088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.