உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆடிப்பெருக்கில் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கில் கோவில்களில் சிறப்பு பூஜை

தர்மபுரி, தர்மபுரி அடுத்த, செக்கோடி மோட்டுப்பட்டி பச்சையம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொளகத்துார் பச்சையம்மன் கோவில், தேவர் ஊத்துப்பள்ளம் தெய்வகண்ணி தேவூத்து மாரியம்மன் கோவில், வெளிபேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி.,ரோடு பூவாடைக்காரி அம்மன் கோவில், கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.* கடத்துார் அடுத்த நல்ல குட்லஹள்ளி நடூர் கிராமத்தில், பழமையான துரோபதையம்மன் கோவிலில், நேற்று அதிகாலை கங்கை பூஜை, கரகம், 108 பால்குடம், மஞ்சள் குடம் அழைக்கப்பட்டது. நேற்று காலை 10:00 மணி அளவில் பூ மிதித்தல் விழா நடந்தது. * புலிகரை அருகே, கோவிலுாரில் பழமையான குந்தியம்மன் கோவில் உள்ளது. இதில், ஆடிபெருக்கையொட்டி, குந்தியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ச்சியாக, குந்தியம்மன், திரவுபதி, தருமர், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன், கிருஷ்ணன் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்த பின், அலங்கரிக்கபட்டு கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.* தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணையாற்றின் கரையோரம் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய, 3 மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு ஆடி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். தங்கள் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில், ஆற்றிலுள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, மாலை அணிவித்து, பொரி துாவி, பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். பின், ஆடு, கோழிகளை பலியிட்டு அங்கேயே சமைத்து, தங்களது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறினர்.தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து இல்லாததால், விழாவிற்கு வந்த பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.* மொரப்பூர் அடுத்த கர்த்தாங்குளத்தில், 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்குள்ள குளத்தில் புனித நீராடிய பின், விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட சுவாமிகளை வழிபட்டனர். இதே போல், தீர்த்தமலை மற்றும் இருமத்துார் தென்பெண்ணையாற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, ஆடிப்பெருக்கு விழாவை விமர்சையாக கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை