கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த வகுரப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பரஹள்ளியில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில், பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில், வகுரப்பம்பட்டி, கடம்பரஹள்ளி, பெரிசாகவுண்டப்பட்டி, பட்டகப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த மாணவ - மாணவியர், கம்பைநல்லுார் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். அதில், 50 பேர் நேற்று காலை 10:00 மணிக்கு திடீரென தலைவலி, கண் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி, கை, கால் வலி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலுள்ள ஒகேனக்கல் நீரை குடித்ததால் தான் ஏற்பட்டு இருக்கும் என கூறினர். இதையடுத்து, மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமையில் மருத்துவக் குழுவினர், மாணவ - மாணவியருக்கு பள்ளி வளாகத்தில் சிகிச்சை அளித்தனர். கடம்பரஹள்ளி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, குடிநீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.இதற்கிடையே, கடம்பரஹள்ளியைச் சேர்ந்த திருப்பதி, 35, என்பவர், தொட்டி நீரில் ஏதேனும் கலந்தாரா என, அவரிடம் கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.