ஒகேனக்கல்:காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பின. கடந்த, 2 நாட்களுக்கு முன், கர்நாடகா அணைகளில் வினாடிக்கு, 38,315 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று கபினியிலிருந்து வினாடிக்கு, 2,063 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 6,547 கன அடி என மொத்தம், 8,610 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் இரவு, 6:00 மணிக்கு வினாடிக்கு, 31,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 17,000 கன அடியாக சரிந்தது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கின் போது, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைப்பாதையில் ராட்சத மரங்கள் அடித்து வரப்பட்டு, தடுப்பு கம்பிகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அதிக நீர்வரத்தால் ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று, 22வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது.