| ADDED : ஜூன் 25, 2024 02:50 AM
தர்மபுரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்றும், தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும், தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.தமிழகத்தில் பெருகிவரும் போதை பொருட்கள் விற்பனையை, அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. தற்போதுள்ள தி.மு.க., அரசு தமிழக மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறது. எனவே, போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய, தமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். கட்சியின் மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட, ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.