உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கடும் வறட்சியால் காய்ந்து வரும் தென்னை மரங்கள்

கடும் வறட்சியால் காய்ந்து வரும் தென்னை மரங்கள்

பாலக்கோடு : தர்மபுரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி, அனல் பறக்கும் வெப்பத்தால் தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன.தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக, 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை நிலவி வருகிறது. அனைத்து நீர் நிலைகளும் வறண்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டம், 1,000 அடிக்கு கீழ் சென்று விட்டது. விவசாய பாசனங்கள், குடிநீர் உள்ளிட்ட அனைத்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளி பகுதியில் கிணறுகள் வறண்டதால் தென்னை மரங்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகின்றன.இது குறித்து, தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: காய்கறிகள், உணவு தானியங்கள் உற்பத்தி செய்யும் அளவிற்கு ஈடாக, தென்னை விவசாயம் இந்த மாவட்டத்தில் உள்ளது. தேங்காய், இளநீர் விலை உயர்ந்து வந்த நிலையில், ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் வரலாறு காணாத வெப்ப நிலையால், நீர் ஆதாரங்களில் நீர் இருப்பு இல்லை, நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதன் காரணமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் அனைத்தும் தற்போது கருகி வருகிறது. இந்தாண்டு ஏற்பட்டுள்ள வறட்சி விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத, மிகப்பெரும் இழப்பாக உள்ளது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, தென்னை பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்