தர்மபுரி: தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தர்மபுரி மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள், 9 மற்றும் 10ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடக்கிறது.இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நடப்பாண்டில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடக்கவுள்ளது. இதில், 11, 12ம் வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் இன்றும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் நாளையும், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது.கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 10,000, 2வது பரிசு, 7,000,- 3வது பரிசு, 5,000 என வழங்கப்படும். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 11, 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகள், கலை கல்லுாரிகள், சட்டக் கல்லுாரிகள், மருத்துவ, கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள், இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.