| ADDED : செப் 14, 2011 12:13 AM
அரூர் :அரூரில், ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடந்தது. அரூர் கச்சேரி மேட்டில் இருந்து துவங்கிய பேரணியை, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குமரகுரு துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவடைந்தது. கருத்தரங்கிற்கு, தலைமை வகித்து நீதிபதி குமரகுரு பேசியதாவது: கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு வரும் மாணவர்கள் முந்தைய ஆண்டு மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வதை தடுக்க வேண்டும். ராக்கிங் கொடுமையால் மாணவர் நாவரசு, மாணவி சரிதா ஆகியோர் பலியாகினர். மாணவ, மாணவிகளை இழிவாகவும், கேவலமாகவும் பேசும் போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ராக்கிங் செய்பவர்களுக்கு சட்டத்தில், இரு ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும். ராக்கிங் செய்தால், மாணவர்கள் தங்கள் கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்ய வேண்டும். தமிழகத்தில் ராக்கிங் கொடுமைகள் குறைந்துள்ளது. மாணவர்கள் கல்லூரிகளுக்கு படிக்க வரும் போது, தாங்கள் படிப்பதோடு, தங்களை சார்ந்தோர்களையும் உயர்த்த முடியும் என்பதை உணர்ந்து படிக்க வேண்டும். இளம் வயதில் செய்யும் தவறுகள் முதுமையில் பாதிக்கும். இவ்வாறு அவர் பேசினார். எஸ்.பி., கணேசனமூர்த்தி, கூடுதல் எஸ்.பி., சரவணன், சார்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கோகுலகிருஷ்ணன், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நந்தினி, டி.எஸ்.பி., சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.