தர்மபுரி : தமிழக அரசு சார்பில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி புதிய நலத்திட்டங்கள் அனைத்தும் துவக்கி வைக்கப்படவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் நீலாபுரம், செட்டிக்கரை, வெள்ளோலை, அக்கமனஅள்ளி, மூக்கனூர், நாயக்கனஅள்ளி, குப்பூர், மாதப்பட்டி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார். மேலும், கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பி. மோட்டுப்பட்டியில் 2.47 லட்சம் மதிப்பிலான புதிய நியாவிலைக் கடையை திறந்து வைத்து அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்கிறார். மேல்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆடு, மாடு வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம், முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை மற்றும் பசுமைத் திட்டத்தின் கீழ் வீடு வழங்க கேட்டல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. தர்மபுரி ஆத்துமேடு பகுதியில் சிறிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கொண்டாய் மேடு கால்வாய் பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரி ஆழப்படுத்தப்படும். மழைக்காலங்களில் இக் கால்வாயை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்படும். மோட்டுப்பட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு அன்றாடம் விலையில்லா அரிசி அத்யாவசிய ஏனைய பொருட்கள் தரமாகவும், எடை குறைவின்றி மக்களுக்கு அளிக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் அரசு விதிக்கு உட்பட்டு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும். விலையில்லா அரிசி 20 கிலோ, 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 500 கோடி செலவில் தமிழக அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் தரமான நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் நீர்நிலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜோகி, துணைப்பதிவாளர் அகஸ்டின், தனி அலுவலர் ரகுநாதன், கூட்டுறவு சார்பதிவாளர் விஜயன், லோகநாதன், விவேகானந்தன், தாசில்தார் கமலநாதன், பி.டி.ஓ., ராமநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆளுமைத்திறன் பயிற்சி வகுப்பு : தர்மபுரி: தர்மபுரி ராமகிருஷ்ணா விவேகானந்தா கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனம் சார்பில், சாரதா பெண்கள் விடுதியில் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி வகுப்புகள் நடந்தது.தொடர்ந்து, 10 நாட்கள் நடந்த இந்த பயிற்சி வகுப்பில், மாணவர்களுக்கு யோகா, ஏரோபிக்ஸ், ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், பயிற்சி வகுப்பில் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தியானம், வாழ்க்கை கல்வி உள்ளிட்ட பல்வேறு ஆளுமைத்திறன் குறித்த பயிற்சி கற்றுத்தரப்பட்டது. நிறுவனத்தின் அறங்காவலர் வசந்தராணி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்.