| ADDED : செப் 19, 2011 12:31 AM
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனை ஊழியரை தாக்கிய வாலிபரை கைது செய்யக்
கோரி நேற்று காலை மருத்துவமனை துப்புரவு ஊழியர்கள் மறியலில்
ஈடுபட்டதையடுத்து, வாலிபரை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி அரசு
மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக உள்ள சண்முகம் (47) நேற்று காலை
மருத்துவமனை முன், துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக
வந்த கார் சண்முகம் மீது மோதியது. இது குறித்து, சண்முகம் காரில் வந்த
வாலிபரிடம் விசாரித்துள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர் காரை விட்டு இறங்கி
சண்முகத்தை தாக்கியுள்ளார். இதை பார்த்த சக ஊழியர்கள் காரை முற்றுகையிட்டு,
வாலிபரை கைது செய்ய கோரி தர்மபுரி- சேலம் மெயின்ரோடில் மறியல் செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தர்மபுரி போலீஸார், காரில் வந்த வாலிபரை
பிடித்து விசாரணை நடத்தியபோது, தர்மபுரியை சேர்ந்த கல்லூரி நிறுவன அதிபரின்
மகன் சரவணன் என்பதும், குடிபோதையில் காரை ஓட்டிவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை தர்மபுரி போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். வாலிபரை
கைது செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.