அரூர்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள், நேற்று முன்தினம் மாலை முதல், அமலுக்கு வந்தன. தர்மபுரி மாவட்டம், அரூரில், கச்சேரிமேடு, 4 ரோடு, சேலம் பைபாஸ் சாலை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை, டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் அகற்றினர். மேலும், பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்த கொடிக்கம்பங்களை அகற்றினர். இருந்த போதிலும் பல இடங்களில், அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள், பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளன.நேற்று முன்தினம் மாலை, அரூர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர், 'சீல்' வைத்தனர்.* பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை, தாசில்தார் சரவணன் உத்தரவின்படி, வெங்கட சமுத்திரம் வி.ஏ.ஓ., நித்யா, பாப்பிரெட்டிப்பட்டி வி.ஏ.ஓ., சதாசிவம் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று முன்தினம் பூட்டு போட்டு, 'சீல்' வைத்தனர். * பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி, கடத்துார், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகள், ஊராட்சி பகுதிகளில் பொது இடங்களிலுள்ள கட்சி கொடி கம்பங்கள், சுவற்றில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை, சுண்ணாம்பு அடித்து அழிக்கும் பணியில், பேரூராட்சி ஊழியர்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.