தர்மபுரி:அ.தி.மு.க., ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த, கே.பி.அன்பழகன் தற்போது, பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். காரிமங்கலம் அருகே, கெரகோடஹள்ளியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.அவருக்கு சந்திரமோகன், சசிமோகன் என, மகன்கள் உள்ளனர். இதில், 2வது மகன் சசிமோகனுக்கும், சென்னையை சேர்ந்த பூர்ணிமா, 30, என்பவருக்கும் 2019 அக்., 30ல் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஆதிரன் என்ற, 2 வயது ஆண் குழந்தை உள்ளது.கடந்த, 18ம் தேதியன்று பூர்ணிமா வீட்டில் விளக்கேற்றியபோது, துணியில் தீப்பற்றி, 80 சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டது. வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று காலை இறந்தார். அவரது தாய் குமுதா, 'என் மகள், தீ விபத்தில் சிக்கி, வேலுார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலை, 6:40 மணிக்கு உயிரிழந்தார். அவரது இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை' என, தெரிவித்துள்ளார்.சம்பவம் குறித்து, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.