தொடர் மின்வெட்டால் பாப்பிரெட்டிப்பட்டி விவசாயிகள் பாதிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டியில், தொடர் மின் வெட்டால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட காளிப்பேட்டை, மஞ்சவாடி, வெங்கடசமுத்திரம், மோளையானுார், அலமேலுபுரம், மெணசி, பூதநத்தம், ஏ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த, சில மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர், வர்த்தக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகள், குழந்தைகள், விவசாயிகள், ஓட்டல் உரிமையாளர்கள் என பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பகல், இரவு நேரங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வருகிறது. இந்த வட்டாரத்தில், 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் வாழை, தென்னை, பாக்கு, பூக்கள், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். தொடர் மின்தடையால் இவைகளுக்கு தண்ணீர் விட முடிவதில்லை. முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் நிறுத்தப்படுவதால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து, வெங்கடசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: பாப்பிரெட்டிப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக மின் சப்ளை வழங்குவதில்லை. வாரத்தில், 2 நாட்களுக்கு கூட ஒழுங்காக மின்சாரம் வழங்குவதில்லை. இலவச மின்சாரமும், கட்டண மின்சாரமும் வழங்குவதில்லை. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால், பயிர்களை காப்பாற்ற முடியாமல், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால், சரியான பதில் கூறுவதில்லை. விவசாயத்தை காக்க தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.