அரூர்: வனப்பகுதியில் இருந்து, விலங்குகள் வெளிவருவதை தடுக்க, தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விலங்கின ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் வருவாய் உட்கோட்டத்தில், அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய, 4 வனச்சரகங்கள் உள்ளது. இதில், மான், மயில், முயல், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் உள்ளன. கடந்த காலங்களில் வறட்சியால், தண்ணீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதிகளில் இருந்து, வெளி வரும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டும், கிணற்றில் விழுந்தும், நாய்களால் கடித்தும் உயிரிழந்த சம்பவங்கள் நடந்தன.நடப்பாண்டு, போதிய மழையின்றி, கோடை காலம் துவங்கும் முன்பே, வனப்பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் தொட்டிகளில், தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன், விலங்குகளுக்கு தேவையான தீவனங்களையும் உற்பத்தி செய்ய வலியுறுத்தும் விலங்கின ஆர்வலர்கள், இதன் மூலம், வனப்பகுதிகளில் இருந்து, விலங்குகள் வெளிவருவதை கட்டுப்படுத்தலாம் என, தெரிவித்தனர்.