பனை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஏ.சப்பானிபட்டியில், பனை தொழிலாளர்கள் கடந்த, 4ம் தேதி பனைமரத்திற்கு காப்புக்கட்டி பொங்கல் விழா நடத்தினர். நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் குடிக்க, 'கள்' கொடுத்தனர். அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதுடன், அரசு உத்தரவை மீறி, 'கள்' இறக்கி, சிறுவர்களை குடிக்க கொடுத்தது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மீது, காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்தனர். நேற்று சுரேஷ் மற்றும் 'கள்' இறக்கியதாக பரந்தாமன், மாதையன், சுரேஷ், சாமிநாதன், சரவணன் உள்ளிட்ட, 7 பேரை, காரிமங்கலம் போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.இதை கண்டித்தும், அவர்களை விடுவிக்கக்கோரியும், 200க்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள், காலை, 11:00 மணிக்கு, காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கைதான, 7 பேரில், 6 பேரை, சொந்த ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மதியம், 3:00 மணிக்கு, பனை தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.