பழுதாகி நின்ற அரசு பஸ் மழையில் பயணிகள் அவதி
போச்சம்பள்ளி, தீபாவளியையொட்டி வந்த, 4 நாள் தொடர் விடுமுறை முடிந்து நிலையில், நேற்று வழக்கம் போல், அலுவலக பணி மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள், நேற்று காலை பஸ்களில் பயணித்தனர்.நேற்று காலை, 8:30 மணிக்கு, திருப்பத்துாரில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ் சென்றது. இதில், 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். அந்த பஸ், போச்சம்பள்ளியிலிருந்து, தர்மபுரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில், 2 கி.மீ., தொலைவிலுள்ள தனியார் பள்ளி அருகே, நேற்று காலை பழுதாகி நின்றது. அந்த பஸ்சை தொடர்ந்து, 40 நிமிடங்கள் வேறு பஸ், இந்த வழித்தடத்தில் இல்லை. இதனால் பழுதாகி நின்ற பஸ்சில் வந்த பயணிகள் தவித்தனர். மேலும் மழை பெய்து கொண்டிருந்ததால் மிகவும் அவதிப்பட்டனர். தொடர்ந்து, 40 நிமிடங்களுக்கு பின் வந்த மற்றொரு அரசு பஸ்சில் ஏறிச்சென்றனர்.