பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த சின்னாறு அணையிலிருந்து, விவசாய பாசனத்திற்காக, 105 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளியிலுள்ள சின்னாறு அணை கடந்த, 4 மாதத்திற்கு முன் நிரம்பியது. இதையடுத்து, பாசனத்திற்கு திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி விவசாய பாசனத்திற்காக சின்னாறுஅணை வலதுபுற வாய்க்கால் வழியாக, 105 நாட்களுக்கு வினாடிக்கு, 30 கன அடி தண்ணீரை திறந்து வைத்தார். இதனால், ஆயக்கட்டு பாசன பகுதிகளான பஞ்சப்பள்ளி, பெரியானுார், அத்திமுட்லு, மாரண்டஹள்ளி, கொலசனஹள்ளி, பி.செட்டிஹள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஹள்ளி, எர்ரனஹள்ளி, சாமனுார் உள்ளிட்ட, 4,500 ஏக்கர் விவசாய நிலம் பாசனவசதி பெறுகின்றன. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென, கலெக்டர் சாந்தி விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில், உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் சாம்ராஜ், தாசில்தார் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.