உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் தரிசனம்

முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் தரிசனம்

தர்மபுரி, மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று, சூரசம்ஹார நிகழ்வு நடந்தது.தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த, 5 அன்று தொடங்கி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்றிரவு அலங்கரித்த தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடு, தொடர்ந்து பைபாஸ் சாலையில் உள்ள சுவாமி நிலத்தில் வானவேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடந்தது. இதில், சூரபத்மனை முருக பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு உபகார பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு, 12:00 மணிக்கு கோவிலில், சுவாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடந்தது.இன்று மாலை, 4:00 மணிக்கு இடும்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழிபாடு நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர், அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.* கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் முருகனுக்கு, அம்மன் வேல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வையொட்டி, முருகன் மற்றும் சூரனை நகரில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதில் சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் முருகன் வேடம் அணிந்து வேண்டுதல் நிறைவேற்றினர். பின்னர் கோவிலுக்கு வந்த முருகன், சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, வேல் அபிஷேகமும், முருகனுக்கு தாலாட்டும் நடந்தது. இன்று மாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.* கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரியம் பகுதி 2ல் அமைந்துள்ள, வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமி கோவில் மற்றும் காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவில் உள்ள சவுந்தர்ய நாயகி சமேத சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இன்று முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. * ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், நேற்று மாலை, 4:30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடந்தது. தொடர்ந்து, சக்திவேலுக்கு அபிஷேம் நடந்தது. தங்கக்கவச அலங்காரத்தில் வேல்முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், ஓசூர் பிருந்தாவன் நகரில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. * அரூர் மாரியம்மன் கோவில் தெருவிலள்ள அனுகிரக ஆஞ்சநேயர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணியர் கோவிலில், 12ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த, 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இன்று சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ