அரூர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றம் செய்த மத்திய, பா.ஜ., அரசை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தர்மபுரி மாவட்டம், அரூர் பி.டி.ஓ., அலுவலகம் முன் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மணி எம்.பி., தலைமை வகித்து பேசியதாவது:பயிர் அறுவடை காலங்களில், 2 மாதம், நுாறு நாள் வேலை இல்லை. மக்கள் விவசாய கூலிக்கு மட்டும் தான் போக வேண்டும். ஏரி வேலைக்கு போக முடியாது. எதற்காக இத்திட்டம். நீங்கள் கையெழுத்து போட்டு விட்டு, வீட்டுக்கு கூட செல்லுங்கள். உடம்பு சரியில்லாதவர்கள் வீட்டுக்கு போகலாம். நன்றாக இருப்போர் வேலை செய்யலாம். இனி, 100 நாள் வேலைக்கு போக வேண்டும் என்றால், நீங்கள் எல்லோரும், ஜி.பி.ஆர்.எஸ்., வசதியுள்ள, குறைந்தளவு, 15,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன் வாங்க வேண்டும். அந்த போனில் போட்டோ எடுத்தால், எந்த ஊரில், ஏரியில், வாய்க்காலில் வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள் என விபரம் வரும். பயோமெட்ரிக் முறையில் போட்டோ அனுப்பினால் தான், உங்களுக்கு சம்பளம் வரும். சத்தியமாக சொல்கிறேன், தமிழக முதல்வர் சட்டப்போராட்டம் மூலம் மீண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பெற்றுத்தருவார். நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தால் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 100 நாள் வேலை நாட்களை, 150 ஆகவும், சம்பவம், 200 ஐ, 400 ரூபாயாகவும் உயர்த்தி தந்திருப்போம். வரும் சட்டசபை தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மீண்டும், 2வது முறையாக முதல்வராகும் சாதனையை பெற்றுத்தாருங்கள், 100 நாட்கள் வேலையை, 200 நாட்களாகவும், இப்போதுள்ள, 200 ரூபாயை, 400 ரூபாயாகவும் உயர்த்தி தருவோம். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில் அரூர், தி.மு.க., தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தென்னரசு, நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.