உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாசு அகற்றும் சேவையில் மனம் குளிரும் ஆட்டோ டிரைவர்

மாசு அகற்றும் சேவையில் மனம் குளிரும் ஆட்டோ டிரைவர்

மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பானதாக மீட்டெடுக்கும் முயற்சியில் ஒவ்வொரு தனி நபருக்கும் அதிக பங்கு உண்டு என்கிறார் சின்னாளபட்டி ஆட்டோ டிரைவர் குமார் 45. ஊருக்கு உபதேசம் என்ற நிலையில் இல்லாமல் விழிப்புணர்வு, வழிகாட்டும் செயல்களை வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் செயல்படுத்தியும் வருகிறார்.கோடை காலத்தில் ஆட்டோவில் பயணிப்போருக்கு வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க மேற்பகுதியில் தென்னை கூரை அமைத்துள்ள இவர் , தனது வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பருவகால மாற்றங்களை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அக்கறை காட்டி வருகிறார்.அவர் கூறியதாவது: குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து போன்றவற்றால் உருவாக்கப்படும் புகை, நச்சு வாயுக்கள், திட, திரவ கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றன. இவற்றால் பருவகால மாற்றங்கள் மட்டுமின்றி உயிர் வாழ அவசிய தேவையாக உள்ள காற்று, நீர், உணவு ஆகியவற்றை தேவைக்கேற்ப சுகாதார முறையில் பெறுவது என்பது சவாலாக மாறி வருகிறது. இந்த அவல நிலையில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு திட்டங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. சூழல் மீட்பு போரில் ஒவ்வொரு தனிநபரும் படை தளபதிகளாக செயல்பட வேண்டும். மாற்றத்தை பிறரிடம் எதிர்பார்ப்பதை விட நம்மில் இருந்து துவங்குவதே அதன் நல்ல தாக்கத்தை அனைவருக்கும் ஏற்படுத்தும்.10ம் வகுப்பு வரை படித்த நான் லாரி டிரைவராக வேலை பார்த்தபோது, வாகனங்களில் வெளியேறும் நச்சுப்புகை குறித்து சிந்திக்க துவங்கினேன். 7 ஆண்டுகளுக்கு முன் நம்மை பாதுகாக்கும் பூமியை காக்க எனது பங்கு குறித்த சிந்தனையால் பசுமை சுற்றுச்சூழலை உருவாக்க திட்டமிட்டேன். ஆட்டோ ஓட்டுனராக மாறி மக்களின் நேரடியான தொடர்பை ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்தது. ஆட்டோ பின்புறத்தில் பொன்மொழிகள், அவசர கால தேவையான ரயில்வே, உள்ளாட்சி அமைப்புகள், போலீஸ், தீயணைப்பு, காஸ் சிலிண்டர் பிரச்னை, உளவியல் ஆலோசனை, மகளிர், குழந்தைகள் பாதுகாப்புக்காக அலைபேசி எண்களை எழுதி வைத்தேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு லட்சம் கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு மரக்கன்று வினியோகம் ஆரம்பமானது. தனியார் நர்சரியில் விலைக்கு வாங்கி பயணிகள், தன்னார்வலர்களுக்கு இலவசமாக வழங்குகிறேன். வாய்ப்புள்ள இடங்களில் நேரடியாக நடவு செய்து விடுகிறேன். இதற்காக ஆட்டோவின் வலது புற இரும்பு பெட்டியில் எப்போதும் 10 மரக்கன்றுகள் வைத்திருப்பேன்.மழையையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்கும் பசுமை சூழலை உருவாக்க ஒரு லட்சம் இலக்கை அடைய பள்ளி, கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி வருகிறேன். சுற்று ஊராட்சிகளிலும் பசுமையை பரப்பும் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன். தனியார் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கற்பித்தலில் சிறப்பாசிரியராக உள்ள எனது மனைவியும், தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., படிக்கும் மகன், 9ம் வகுப்பு மாணவியான மகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் உதவியாக உள்ளனர். சில நண்பர்களும் இதற்கான உதவிகளை வழங்கி வருகின்றனர்.பள்ளி, கல்லுாரிகளில் மரக்கன்று நடவு, விழிப்புணர்வு சார்ந்த ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இது தவிர பார்வையற்றோர், மனநலம் பாதித்த, ஆதரவற்றோருக்கு உதவி வழங்கல், ரத்ததான சேவையிலும் ஈடுபட்டு வருகிறேன். இவர்களுக்கான சேவையில் பொங்கல், புத்தாண்டு, தீபாவளி பண்டிகை நாட்களின் கொண்டாட்டம் மன நிறைவு தருகிறது. துாய்மைபணியாளர்கள் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட தன்னலமற்ற சேவை துறையினரை ஊக்குவிக்கவும் தவறுவதில்லை என்றார்.குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை