| ADDED : ஆக 22, 2024 03:38 AM
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. கிராமங்களில் தென்னை, வாழை, சவ்சவ், காபி, எலுமிச்சை, மிளகு உள்ளிட்ட சாகுபடி நடக்கிறது. மலைப்பகுதி மட்டுமின்றி அடிவார கிராமங்களிலும் வன உயிரினங்களின் நடமாட்டம் சில ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்துள்ளது. யானைகள், காட்டு பன்றிகளால் பயிர்களை சேதப்படுத்தப்படும் அவல நிலை தொடர்கிறது. சோலார் மின் வேலி போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் பெயரளவில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.யானைகளால் பயிர்கள் , வீடுகளை சேதப்படுத்தல், விவசாயிகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன. சில ஆண்டுகளாக கன்னிவாடி வனச்சரக பகுதியில் வன ஊழியர் உட்பட பலர் பலியான சம்பவங்கள் தொடர்ந்தும், வழக்கம் போல வனத்துறையின் தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. யானைகளின் நிரந்தர வழித்தட பகுதியை கண்காணித்து அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் திட்டமிடலை வனத்துறை கண்டுகொள்ளவில்லை. பட்டாசு வெடிப்பது, புகைமூட்டம் எழுப்புதல் போன்ற நடவடிக்கைகள் ஆவணப்படுத்த மட்டுமே பயன்படுகின்றன. யானைகளை கட்டுப்படுத்துவதில் பலனளிப்பதாக இல்லை. நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.