| ADDED : ஜூலை 02, 2024 09:00 PM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில், கத்தியைக் காட்டி காதலர்களை மிரட்டி, நகை பறித்த 4 பேரை கைது செய்த போலீசார், 15 சவரன் நகைகளை மீட்டனர். திண்டுக்கல் அருகே ஓடைப்பட்டி, ரங்கநாதபுரம், கரட்டுமேடு பகுதிகளுக்கு வரும் இளஞ்ஜோடிகளை கண்காணித்த ரவுடிக்கும்பல், கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் பறித்தனர்.இதுகுறித்து பலர் தாடிக்கொம்பு போலீசில் புகார் செய்தனர். ரவுடிக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் - பழனி சாலையில் போலீசார் நேற்று முன் தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு பைக்குகளில் நான்கு வாலிபர்கள் வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காதல் ஜோடிகளை மிரட்டி நகை பறித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.திண்டுக்கல் பொன்னகரத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 31, ரங்கநாதபுரம் செந்துார் பாண்டி, 29, மாலப்பட்டி சிவசக்தி, 31, ரவுண்ட் ரோடு ஷேக் பரீத், 21 ஆகிய நான்கு பேரையும் கைது செய்து 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.