| ADDED : மார் 29, 2024 06:08 AM
திண்டுக்கல் : கோடை காலத்தையொட்டி தண்ணீரின்றி வாடும் பறவைகளுக்காக அவரவர் வீடுகளில் தண்ணீர் , உணவு வைக்குமாறு திண்டுக்கல் மாநகராட்சி பணியார்களை அறிவுறுத்திய நிர்வாகம், அலுவலக மாடியிலும் தண்ணீர், உணவினை வதை்துள்ளது.திண்டுக்கல் நகரில் கோடை வெயில் காரணமாக மக்கள் வெளியில் நடமாடாமல் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உள்ளது. பலரும் மாலை,இரவு நேரங்களில் வெளியில் வருகின்றனர். இது போல் காகம்,சிட்டுக் குருவி,மைனா,புறா உள்ளிட்ட பறவைகளுக்கு கோடை காலங்களை சமாளிப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. நீர் தேக்கங்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு உள்ளது. இதனால் பறவைகள் உயிரிழக்கும் நிலையும் தொடர்கிறது. இதைத்தடுக்கும் வகையில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக மாடியில் 3 இடங்களில் பறவைகள் தண்ணீர் குடிக்கும் விதமாக டப்பாக்களில் தண்ணீரும், உணவாக கம்பு பயிர்களையும் வைத்துள்ளனர். இது போல், மாநகராட்சியில் பணியாற்றும் அலுவலர்கள் தங்கள் வீடுகளில் பறவைகளுக்கு கோடை காலம் முடியும் வரை தண்ணீர் வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.