| ADDED : ஜூன் 29, 2024 02:04 AM
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 10:43 மணிக்கு நில அதிர்வுடன் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதனால் ஜன்னல்கள் அதிர்ந்ததுடன் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.இம்மாவட்டத்தில் வடமதுரை, வேடசந்துார், நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல் பகுதிகளில் 6 ஆண்டுகளாக அவ்வப்போது அரை கி.மீ., துாரத்திற்குள் பலத்த வெடிச்சத்தம் கேட்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இச்சத்தத்திற்கு பின் வெவ்வேறு பகுதிகளில் வசிப்போர் அலைபேசி மூலம் மற்றவர்களுடன் பேசி வெடிச்சத்தம் 30 கி.மீ., சுற்றளவில் கேட்பதை உறுதி செய்கின்றனர். சில நேரங்களில் பயிற்சி விமானம் சென்ற சில நிமிடங்களிலும் இதுபோன்று சத்தம் கேட்பதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வடமதுரை பகுதியில் 10:43 மணிக்கு பலத்த வெடிச்சத்தத்துடன் நில அதிர்வையும் மக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர்.நத்தம்: சாணார்பட்டி அருகே கோபால்பட்டி, கே.அய்யாபட்டி, வேம்பார்பட்டி, கணவாய்ப்பட்டி, மொட்டையா கவுண்டன்பட்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று காலை 10:43 மணிக்கு வெடிச்சத்தத்தில் கடைகள், வீடுகளின் முன்பக்கம் போடப்பட்டிருந்த தாழ்வாரங்கள், ஜன்னல்கள் அதிர்ந்தன. சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. வீடுகள், கடைகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.இதுதொடர்பாக மாவட்ட புவியியல் துறையினர் ஆய்வு நடத்தி இதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.கலெக்டர் பூங்கொடி கூறியதாவது: நத்தம், வடமதுரை பகுதிகளில் நில அதிர்வு, வெடிசத்தம் எழுந்ததாக தகவல்கள் வந்துள்ளன. அந்தந்த பகுதி தாசில்தார்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளேன். இது சம்பந்தமாக ஆய்வு நடத்தப்படும் என்றார்.