இருளில் மூழ்கிய கிராமங்கள்கொடைக்கானல்: -திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் தொடர்ந்து பற்றி எரியும் வரலாறு காணாத காட்டுத்தீயால் ஏராளமான வன நிலங்கள் தீக்கிரையாகின. மேல்மலை கிராமங்களும் இருளில் மூழ்கின.கோடை வெயில் மலைப்பகுதியில் தகிக்கும் நிலையில் வனப்பகுதியில் உள்ள புல் உள்ளிட்ட தாவரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. சில நாட்களாக பூம்பாறை, கூக்கால் வனப்பகுதியான பாரிகோம்பை, வெம்படி, சந்தனப்பாறை, மாணிக்கம் குடை தொட்டி உள்ளிட்டவை தீப்பற்றி எரிகின்றன. தொடர் தீயால் வனத்தில் அடுக்கப்பட்டிருந்த மரங்கள் தீயில் கருகின.தீயணைப்பு, வனத்துறையினர் தீயை அணைக்க போராடுகின்றனர். சூறைக்காற்று, சுட்டெரிக்கும் வெயில் என வன மரங்கள் எரிகின்றன. காட்டுத்தீயிலிருந்து வெளியேறும் புகை கிராம பகுதி வரை பரவுவதால் சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மேல் மலைப்பகுதிவரை புகை மண்டலம் எழுந்துள்ளது. வனவிலங்குகளும் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. திரும்பிய வாகனங்கள்
பூம்பாறை - மன்னவனுார் மெயின் ரோட்டில் கூக்கால் பிரிவு இடையே மெயின் ரோட்டோரம் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிகிறது. தீ மத்தியில் பஸ் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் ஆபத்தான முறையில் சென்றன. நேற்று மதியத்திற்கு பின் பாதுகாப்பு கருதி வாகனங்களை வனம் மற்றும் போலீஸ் துறையினர் திருப்பி செல்ல அறிவுறுத்தினர்.கலெக்டர் பூங்கொடி, மண்டல வன பாதுகாவலர் காஞ்சனா, டி.எப்.ஒ., யோகேஷ் குமார் மீனா தீப்பற்றிய பகுதிகளை பார்வையிட்டனர். ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் 300க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருளில் மூழ்கிய கிராமங்கள்
வனத்துறையினர் கூறியதாவது: இரவு, பகலாக எரியும் தீயை அணைக்க முயற்சித்து வருகிறோம். தீயால் கொடைக்கானல் மேல்மலை கிராமங்கள் மன்னவனுார், கிளாவரை, கவுஞ்சி உள்ளிட்ட 20க்கு மேற்பட்டவை மின் தடையால் இரண்டு நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன. காட்டுத்தீ மத்தியில் மின்வாரியத்தனர் மேல் மலைப்பகுதிக்கு மின்சப்ளை அளிக்க போராடியும் முடியவில்லை. காட்டுத்தீயால் நுாற்றுக்கணக்கான ஏக்கர் தீக்கிரையாகின என்றனர்.